அரசால் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒரு அலகாக அங்கீகரித்து குடும்ப அட்டை வழங்கப்படும். அரசுக்கும் மக்களுக்கும் இது முக்கியமான அடிப்படை ஆதாரம். தற்போது நவீன மின்னணு அட்டை வடிவிலான அட்டை பொது விநியோகத் துறையின் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், உணவு உள்ளிட்ட பொருட்கள், மற்றும் அரசு அவ்வப்போது பண்டிகை காலங்களில் வழங்கும் பரிசு பொருள், நிதி உதவித்தொகை இந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே பெற இயலும். கொரோனா நெருக்கடி காலத்தில் இத்தகைய குடும்ப அட்டை இல்லாமல், அரசு வழங்கும் ரேசன் உணவு பொருட்கள், நிதி உதவிப்பணம் பெற இயலாமல் தமிழ்நாட்டில் சுமார் 40,000 பழங்குடி குடும்பங்கள் பரிதவித்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்த வரையில் 7,94,697 பழங்குடி மக்கள் தொகையில் சுமார் 6,60,280 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அடர்ந்த காடுகளில், கிராமப்புற பகுதிகளில் வாழ்பவர்கள். பெரும்பாலும் அரசு நிர்வாக கட்டமைப்பில் இருந்து வெகுகாலமாக விலகி வாழ்ந்து வருபவர்கள்.
ஆதாரமில்லாத ஆணிவேராய் பழங்குடிகள்;
மனித சமூகத்தின் ஆணிவேர் பழங்குடிகள் ஆனால் நவீன சமூகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, குரலற்ற பழங்குடிகள் குடும்ப அட்டை இல்லை என்ற ஒரு காரணத்தினால் இத்தகைய உதவிகள் கிடைக்காமல் இருப்பது மிக வேதனைக்குரியது.
கூட்டுறவுச் சங்கங்கள் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குபவை) 32,883, இதர கூட்டுறவுச் சங்கங்கள் 483, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1,455, மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் 423 என மொத்தம் 35,244 நியாய விலைக் கடைகள் தமிழ்நாட்டில் உள்ளன, மொத்தம் 2,02,31,394 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளது.
தமிழ்நாடு அரசும் இக்கடைகளின் மூலமாகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக 4,000 ரூபாய், 14 வகையான பலசரக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி வருகிறது. அரசு ஊழியரிலிருந்து இருந்து வருமான வரி கட்டுவோர், அரசின் பென்சன் பெறுவோர் கூட பயன் அடைந்துள்ளனர்.
ஆனால் இன்னொருபுறம் பழங்குடிகளின் கல்வியறிவின்மை, ஆதார் அட்டை பெறுவதில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல், பிறப்பு சான்றிதழ் இல்லாதது, பழைய அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்தல், வீடுகளில் கதவிலக்கம் இன்மை, போக்குவரத்து சிரமங்கள், கூச்ச மனப்பான்மை தடையாக உள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் லஞ்சம், கொரோனா காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் - அரசு அலுவலகங்கள் முறையாக செயல்படாமை, மின்னணு முறையில் விண்ணபித்தல், தனிப்பெண்கள் அட்டை பெற இயலா நிலை, அதிகாரிகளின் அலட்சியம், தேர்தல் நடத்தை விதி முறைகள், பழங்குடி மக்கள் - அரசு அலுவலர்கள் இடம் பெயர்தலும், பணி மாறுதலும், தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் நியாயவிலை கடையில் பொருட்களை வாங்கவில்லை எனில் அட்டையை ரத்து செய்யும் விதிமுறை, போன்ற பல காரணங்களால் பழங்குடிகள் குடும்ப அட்டை பெறுவதிலும், அதனை தக்க வைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. குடும்ப அட்டை இல்லாதோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவும் காரணங்களாக உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பழங்குடி மக்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் உள்ளனர்.
பழங்குடிகளை பொறுத்த வரையில் 4,000 ரூபாய் உதவித் தொகை என்பது உண்மையில் சற்று பெரிய தொகைதான். ஏற்கனவே காடுகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே கிடைக்கும் கிடைக்கும் தேன், மிளகு, மூலிகைகள், கிழங்கு, சீயக்காய், கடுக்காய், நெல்லிக்காய், காட்டு மாங்காய், மூலிகைகள் போன்ற காடுபடு பொருட்களையும், பிற விவசாய உற்பத்தி பொருட்களை வெளியே சென்று விற்பனை செய்ய முடியாமலும், அரசின் நூறு நாட்கள் உள்ளிட்ட எந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மிகவும் துயரத்தில் வாடுகின்றனர். குறிப்பாக காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் நிலைமை படுமோசம்.
கொரோனா பொது ஊரடங்கால் காடுகளிலும், சமவெளியிலும், ஊருக்கு வெளியே தனித்தும், பொது சமூகத்திடம் இருந்து விலகி தூரமாக வாழும் இம்மக்கள் தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை, காய்கறி பொருட்களை வாங்கி வருவது முற்றிலும் சிரமமான காரியம். அரசு, தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், மூலம் சில இடங்களில் உதவிகள் கிடைத்தாலும் எல்லா பகுதிகளிலும் நிலைமை அவ்வாறு இல்லை.
பழங்குடிகளுக்கு வழங்கப்படும் உதவியில் தொடரும் குளறுபடிகள்:
கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடி காலத்தில் அன்றைய அ.தி.மு.க அரசு கூடுதலாக வழங்கிய 1,000 ரூபாய் பழங்குடி நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தவர்களுக்கு மட்டுமே துவக்கத்தில் வழங்கப்பட்டன. பெருவாரிய பழங்குடி மக்கள் செயலற்று போன வாரியத்தில் உறுப்பினராக இல்லை. மேலும் உறுப்பினர் அட்டையை முறையாக புதுப்பிக்கவும் இல்லை. உண்மை நிலவரத்தை தாமதமாக புரிந்து கொண்ட அரசு அனைத்து பழங்குடி குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க உத்தரவிட்டது. இந்த உதவி தொகையானது பல இடங்களில் முறையாக இம்மக்களுக்கு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. ஒரு சில இடங்களில் அரசு ஊழியர்கள் பணத்தை முழுமையாகவும், முறையாகவும் பட்டுவாடா செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாயினர்.
சில இடங்களில் மக்களிடம் நேரடியாக நிவாரண உதவிப் பணம் விநியோகித்து விட்டு நாங்கள் காட்டுக்குள் நேரடியாக (கஷ்டப்பட்டு?) வந்து பணம் தந்து இருக்கோம்., எங்களுக்கு வந்துட்டு போன வகையில், வண்டிக்கு டீசல் மற்றும் உணவுக்கு பணம் தாருங்கள் என அதிகாரிகள் கேட்டு வாங்கி கொண்டு சென்று சம்பவங்கள் நடந்துள்ளது.
எட்டாத கனியாகும் நடைமுறை சிக்கல்கள்
இது குறித்து காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயன் மனைவி புவனேஸ்வரி கூறியதாவது.
எங்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. 4 வயதில் நிவேதா எனும் பெண் குழந்தையும் உள்ளது. நானும் என் கணவரும் காட்டில் உள்ள எங்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து சுமார் 10 தடவையாச்சும் ரேசன் கார்டுக்காக எங்க ஊரில் இருந்து 7 கி. மீ தூரம் அடர்ந்த காடு வழியாக பவர் ஹவுஸ் வரை நடந்து பிறகு அங்காளக்குறிச்சி வரை ஒரு பஸ்லயும், அதுக்கு பிறகு உடுமலைபேட்டைக்கு இன்னொரு பஸ்ல போகணும். மொத்தம் 80 கி.மீ தூரம் பஸ்லயும், 10 கி. மீ தூரம் நடக்கணும். ஆனால் பச்சை குழந்தையை வச்சிட்டு 10 தடவைக்கும் மேல அலைஞ்சேன். ஒரு நாளில் போயிட்டு வீட்டுக்கு திரும்புறது முடியாத காரியம். கார்டும் கிடைச்ச மாதிரி இல்ல. அப்புறம் நானே வெறுத்து போயிட்டேன்.
ஆனா எங்க ஊர் மக்களுக்கு பவுர் ஹவுஸ்ல வந்து அரிசி போடுறவுங்க ரூபாய் 2,000 கொடுங்க நாங்க ரேசன் கார்டு வாங்கி தரேன்னு சொல்றாங்க. எனக்கு அப்படி லஞ்சம் கொடுத்து கார்டு வேண்டாம்னு சொல்லிட்டேன். என் மகளுக்கு பிறந்த சர்டிபிகேட்டும் இல்ல. அதனால அவளுக்கு இன்னும் ஆதார் அட்டையும் எடுக்க முடியல. எல்லாரும் அரிசி பருப்பு, உதவித்தொகை வாங்கும் போது என்னால வாங்க முடியல என்கிற போது ரொம்ப வருத்தமாகவும் இருக்கு, கஷ்டமாகவும் இருக்கு, நாங்க ரேசன் அரிசியை தவிர வேற எதுவும் சாப்பிடுவது இல்லை. அம்மாவுக்கு கிடைக்கிற அரிசியில் தான் தனியா குடித்தனம் இருக்கும் நாங்கள் சாப்பிடுகிறோம் என்றார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்கள் இருப்பிடத்திலிருந்து 1.5 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. மக்கள் எளிதில் சென்று வர முடியாத பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடிய பகுதிகளில் நியாய விலைக் கடைகளை திறக்க தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. தேவைப்படும் போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தளர்த்தி புதிய நியாய விலைக் கடைகள் திறக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசின் மக்கள் சாசனத்தில் கூறுகிறது. இது நடப்பது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது.
பழங்குடிகளுக்கு தொடரும் பேரவலம்
மதுரை மாவட்டம் பளியர் பழங்குடி இனத்தலைவர் தங்கராஜ் (வயது 32)
கூறுவதாவது எனக்கு சொந்த ஊர் அழகம்மாள்புரம். ஊருக்கு மேற்கு புறம் உள்ள குதிரை மலை தான் எங்க பூர்வீகம், எங்க அப்பா காலத்துல மலையில யாரும் வாழக் கூடாதுன்னு கட்டாயமா எங்களை கீழே இறக்கி விட்டுட்டாங்க. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா சீலநாயக்கன்பட்டி ஊராட்சி அழகம்மாள்புரம் எங்க ஊர். எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகப்போகிறது. பலதடவை குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து இருக்கேன். உடனே பரிசீலனை பண்ணி தர மாட்டாங்க. பலதடவை எங்களை அலைய விடுவாங்க. ஏதாவது காரணம் சொல்லுவாங்க. நாங்களும் அதை சரி பண்ணி கொடுத்தா அந்த அரசு அதிகாரி இருக்க மாட்டாங்க. அப்புறம் புதுசா எழுதி கொடுக்கணும். அவங்களும் எங்களை அலைய விடுவத பார்க்கும் போது இது காசுக்காக தான் என தோணும். எங்க ஊர்ல சுமார் 25 குடும்பத்துல 11 குடும்பத்திற்கு ரேசன் கார்டு இல்லை என்றார்.
இது போன்ற சூழ்நிலைதான் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. குறிப்பாக சமவெளி பகுதியில் வாழும் இருளர் உள்ள கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த நிலை நீடிக்கிறது. வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது.
எளிய மக்களுக்கு அடைதலே திட்டத்தின் வெற்றி
இந்திய அரசியலமைப்பின் அரசு நெறிமுறைக் கோட்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்து உயர்வு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றினை அடைய, மாநிலத்தில் வசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் மொத்த உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு கடமைப்பட்டுள்ளது. கடந்த 40 வருடங்களாக நடைமுறையில் உள்ள அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் வருமான அளவு அல்லது சமூக நிலை பாகுபாடில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 01.11.2016 முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), 2013 அமல்படுத்தப்பட்ட போதிலும், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் தன்மை மாறாமல், சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள வழங்கல் அளவின்படி செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் அனைவராலும் வியந்து போற்றப்படுகிறது. என்று தமிழ்நாடு கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது விந்தையாக உள்ளது.
தமிழ்நாட்டில் எந்த ஒரு நியாய விலைக் கடையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்குரிய உரிமப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் 1.02.2020 முதல் பரிட்சார்த்த முறையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிதி ஆண்டு 2020-2021 ல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மண்ணில் பூர்வகுடி பழங்குடி மக்களுக்கு 10 முதல் 40 சதவீதம் குடும்ப அட்டைகள் இல்லாத நிலை நீடிக்கிறது. இது பேரவலம். இவ்வாறு தமிழ்நாட்டில் சுமார் 50,000 குடும்பங்கள் ரேசன் அட்டை இல்லாமல் பரிதவித்து வருகிறார்கள்.
நாட்டின் எந்த ஒரு சட்டங்களும், திட்டங்களும் சமூகத்தின் கடைக்கோடியில் இருப்பவனுக்கு எந்த வகையில் முழுமையாக பயன் அடைகிறதோ அப்போது தான் அதன் நோக்கம் முழுமையாக நிறைவடையும். நல்ல அரசுக்கான இலக்கணமும் கூட இதுவே.
அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். ஆம் அரசு உடனடியாக குடும்ப அட்டை இல்லாத பழங்குடிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு நிவாரண உதவி மற்றும் உணவுப்பொருள் வழங்கிட வேண்டும். இதற்காக பெரிதாக அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட போவதில்லை. அரசு தங்களை கைவிடாது என்று தமிழக பழங்குடிகள் முழுமையாக நம்புகிறார்கள்.
コメント